திருவள்ளூர் மாவட்டத்தில் இன்சூரன்ஸ் தொகை மற்றும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையை இரு மகன்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவத்தில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையை அடுத்துள்ள தண்ணீர் குளத்தை சேர்ந்தவர் கணேசன். 56 வயதான இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு மோகன்ராஜ் மற்றும் ஹரிஹரன் என இரு மகன்கள் உள்ளனர். இரண்டு பேரும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இப்படியான நிலையில் மூத்த மகனான மோகன்ராஜ் நெசவுத்தொழில் செய்து வருகிறார் இளைய மகனான ஹரிஹரன் கார் டிரைவராக உள்ளார்.
பாம்பு கடித்து இறந்த கணேசன்
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தனது வீட்டின் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசன் நள்ளிரவு நேரத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக அவரது இரு மகன்களும் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொதட்டூர் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி கடந்த ஆறு மாதங்களில் கணேசன் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்துள்ளார். இதில் கணேசன் மீது மட்டும் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணத்தைக் கேட்டு மகன்கள் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை நாடியுள்ளனர்.
தனிப்படை போலீசார் விசாரணை
இதனையடுத்து சந்தேகமடைந்த அந்த காப்பீட்டு நிறுவனம் வடக்கு மண்டல ஐஜியான அஸ்ரா கார்க்கிடம் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி ஜெயஸ்ரீ, காவல்துறை ஆய்வாளர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையில் இன்சூரன்ஸ் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து பாம்பை வைத்து தனது தந்தையை கொன்றது தெரிய வந்துள்ளது இந்த சம்பவத்தில் பாலாஜி, பிரசாந்த், ஆகிய இரு நண்பர்களும் உதவியுள்ளனர்.
நடந்தது என்ன?
தனிப்படை போலீசார் மோகன்ராஜ் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரின் செல்போன் உரையாடல்களையும் அவர்களின் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது அண்ணன், தம்பி இருவரும் கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். இதனால் யாரும் கண்டுபிடிக்காத வகையில் தந்தையை கொலை செய்து விட்டு அரசு வேலை, இன்சூரன்ஸ் பணம் ஆகியவற்றை பெற்று சொகுசாக வாழலாம் என சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய மோகன்ராஜ் அதற்காக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் பாலாஜி என்பவரின் உதவியை நாடியுள்ளார். பாலாஜி அவரது உறவினரான நவீன் குமாரையும், அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரையும் அனுப்பியுள்ளார். இதில் பிரசாந்த்தின் மனைவியின் தந்தை பாம்பு பிடிப்பவர் என்பதால் அவருக்கு பணத்தைக் காட்டி கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை சாக்குப்பையில் அடைத்து கணேசன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரின் கழுத்தில் மூன்று முறை பாம்பை விட்டு கடிக்க வைத்துள்ளனர். இதில் விஷம் தலைக்கறி கணேசன் இறந்துள்ளார். அதனை உறுதி செய்த பின்பு பாம்பு பிடிப்பவரான தினகரன் அதனை அங்கேயே அடித்துப் கொன்றுள்ளார். இதன் பிறகு நான்கு பேரும் அங்கிருந்து சென்று விட்டு சிறிது நேரத்தில் திரும்பியுள்ளனர். தனது தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை மகன்கள் இருவரும் நம்ப வைத்து அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும் கட்டுவிரியன் பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் ஹரிஹரன் இருவரும் நாகப் பாம்பை கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர். ஆனால் அதில் கணேசன் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை சுதாரித்து அவர்கள் கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இந்த வழக்கில் 10 நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.