சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே உள்ள யாகசாலை மண்டபத் தெருவில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு முறையாக அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை நியாய விலை கடை விற்பனையாளர்  முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதில்லை என பொதுமக்கள்  தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் நேற்று மாலை நியாயவிலைக் கடையில் இருந்து தரமான அரிசி 3 மூட்டைகளில் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்ற வரை பிடிக்க துரத்தியப்போது  மூட்டைகளை ரோட்டிலேயே போட்டு விட்டு அவர் தப்பி ஓடி விட்டார்.

 

பின்னர் இது குறித்து அப்பகுதி  மக்கள், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் அளித்ததன் பேரில் நேற்றைய தினம் சம்பவ இடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, நியாயவிலைக் கடையில் சோதனை மேற்கொண்டும், நியாய விலை விற்பனையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில்  ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாகவும்,தொடர்ந்து அப்பகுதியினரின் புகார்களின் எதிரொலியாக தற்போது யாகசாலை மண்டபத் தெருவில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையின் விற்பனையாளரான செல்வம் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் இதே போல் பொது மக்களுக்கு அரசு வழங்கக் கூடிய ரேஷன் பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தாலும்,சட்ட விரோதமான கடத்தலுக்கு கடை விற்பனையாளர்கள்  துணை நின்றாலும் அவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.



வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள லட்சக்கணக்கானோர் நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கியுண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில சமூக விரோதிகள் ரேஷன் கடையின் விற்பனையாளர்களுடன் சேர்ந்துகொண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை கடத்தி பாலிஷ் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 



காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடத்தப்படும் அரிசி ஆந்திராவிற்கு சென்று அங்கு பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் வியாபாரத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், 18 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி விலை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு... 

 



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X