மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு சீர்காழி, மயிலாடுதுறை நெடுஞ்சாலையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான நான்கு புளிய மரங்கள் இடையூறாக உள்ளது என்று, அதனை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.  




மூன்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் பலன் தரும் உயிர் மரங்கள் வெட்டபடுவதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அதனை  தடுத்து நிறுத்தி வாக்குவாதம் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெலாமேக் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து சமுக ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி வட்டாட்சியரிடம் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 




மனுவை பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவில் உயிரிழந்த நடராஜன் என்பவரின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து சீர்காழி மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி வாகனத்தில் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் போலி ஆவணம் தயார் செய்தது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.




சிதம்பரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், சீர்காழி புறவழி பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரம் மரம் வெட்டுவதை கண்ட பலரும் சாலை விரிவாக்க பணிக்காக தான் மரங்கள் வெட்டப்படுவதாக எண்ணி அதுகுறித்து விசாரிக்காமல் கடந்து சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அரசுக்கு சொந்தமான சாலையோர மரத்தை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் சீர்காழி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலை துறையினரால் வெட்டப்பட்டதா, அல்லது நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறுவதை அறிந்து சமூக விரோதிகள் கள்ளத்தனமாக மரங்களை வெட்டி கடத்திய உள்ளார்களா என விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்றும் மரங்கள் நடப்பட்டு உள்ளதா என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சீர்காழி பகுதி சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.