புதுச்சேரியில் இருந்து ஓசூருக்கு கல்வித்துறை ஸ்டிக்கர் ஒட்டி லாரியில் 9 டன் ரேஷன் அரிசி மூட்டை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் இருந்து சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வில்லியனூர் அருகே ஊசுட்டேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்து, மற்றொரு சிறிய சரக்கு வாகனத்ததுக்கு அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் ''புதுச்சேரி அரசு கல்வித்துறை அரிசி தடை செய்யாதீர்'' என்ற வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனங்களில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனையிட்டனர். இதில் மினி சரக்கு வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளும், சரக்கு லாரியில் 100 மூட்டைகளும் என 9 டன் ரேஷன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 வாகனங்களிலும் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி அருகே வடமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்களான சீனிவாசன், நடராஜன் மற்றும் டிரைவர்கள் ஓசூர் எத்திராஜ், சேந்தநத்தம் ஏகாம்பரம் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
4 பேரும் புதுச்சேரியில் இருந்து ஒரு கிலோ அரிசியை 3 ரூபாய்க்கு வாங்கி, அதனை பாலீஷ் போட்டு அதிக விலைக்கு விற்க ஓசூருக்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான 4 பேரும் புதுச்சேரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 9 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி: மாற்றுத்திறனாளி மாணவிக்காக ‘பேவர் பிளாக்’ சாலை அமைத்து கொடுத்த கலெக்டர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்