நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், விலங்குகளை கோயில்களில் நடத்தும் விதம் குறித்து இரண்டு எம்பிக்கள் பேசியுள்ளனர்.


விதி 377-இன் கீழ் வரும் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், கோயில்களில் விலங்குகள் நடத்தப்படும் விதம் குறித்து ராய்ப்பூர் தொகுதி பாஜக எம்பி சுனில் குமார் சோனி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், "விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம், 1960, 28ஆவது பிரிவை திரும்ப பெற வேண்டும்" என்றார்.


மத சடங்குகளின் ஒரு அங்கமாக விலங்குகளை கொல்வது இச்சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. விலங்குகளை கொல்ல ஆட்சேபனை தெரிவித்த அவர், "மத சடங்குகளின் அங்கமாக ஆடு, எருமை, ஒட்டகங்களை பயற்சி பெறாத ஒருவர் கொடுமை முறையில் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்றார்.


பின்னர் பேசிய ஹட்கனாங்கலே தொகுதி சிவசேனா எம்பி சம்பஜி ராவ் மானே, "எனது தொகுதியில் உள்ள சிரோலா கிராமத்தில் நாக பஞ்சமியை முன்னிட்டு உயிர் உள்ள பாம்புகளை வழிபட அனுமதிக்க வேண்டும். இந்த வழிபாட்டு முறை பல 100 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972இன் கீழ் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.


கோயில்களில், ஆடு, மாடு, கோழிகளை பலி கொடுப்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கம். இதற்கு எதிராக பாஜக எம்பி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சபரிமலையில் பெண்களை அனுமதிக்காமல் இருப்பது பல ஆண்டு பழக்க வழக்கம் எனக் கூறி, கோயிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக பல போராட்டங்களை கேரளாவில் நடத்தியது. ஆனால், கேரளாவில் பழக்க வழக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, கோயில்களில் விலங்குகளை பலி கொடுக்கும் பல ஆண்டுகால பழக்க வழக்கத்திற்கு எதிராக சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பாஜக எம்பி பேசியிருக்கிறார்.


இந்துக்களின் பாதுகாவலர்கள் என பேசிவிட்டு அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


கடந்த 2003ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சியின்போது, கோயில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இச்சட்டம் திரும்பபெறப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண