கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியை அடுத்த முனியன்கொட்டாயைச் சேர்ந்தவர் சிவசம்பு (35). இவர் மளிகைப் பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை செய்து வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராகவும் உள்ளார்.


கடத்தி பணம் கேட்டு மிரட்டல்


இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிவசம்பு மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி பிரியாவுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் இவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் சிவசம்புவை வழிமறித்துள்ளது.


தொடர்ந்து இந்த கும்பல் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டி, சிவசம்புவை மட்டும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவரது மனைவியை அங்கேயே விட்டுச் சென்ற கும்பல், தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். 


உஷாரான கும்பல்.... மடக்கிப் பிடித்த காவல் துறை


இந்நிலையில், முன்னதாக இதுகுறித்து பிரியா கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சிவசம்புவை தேடி வந்த காவல் துறையினர், அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடினர்.


இதில் சிவசம்புவைக் கடத்திய கும்பல், பர்கூர் அடுத்த ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே சிவசம்புவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால், காவல் துறையினர், தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல் சிவசம்புவின் கண்ணைக் கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவசம்புவை காவல் துறையினர்  மீட்டனர். 


மேலும், கடத்தல் கும்பல் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரைச் சேர்ந்த பழனி (32), முருகன் வட்டத்தைச் சேர்ந்த குமரவேல் (28), பர்கூர் ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (21), திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் மணி என்ற மணிகண்டன் (34), தோரணம்பதி மணி (30), ஜெகதேவி முரளி (42) ஆகிய ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 


விசிக பிரமுகர்களும் அடக்கம்...


மேலும், இந்தக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்களான செட்டியம்பட்டியைச் சேர்ந்த அரி என்கிற கணபதி (32), கந்திலி இர்பான் (34) ஆகிய இரண்டு பேரை  காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.


மேலும், சிவசம்புவை கடத்தியதற்கான காரணம் குறித்து கைதான ஆறு பேரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண