காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் நேற்று  மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36 ஆவது வார்டு பகுதியில் தற்செயல் தேர்தல் நடைபெறுவதால் அந்த மண்டலத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.






இந்நிலையில், கூட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை உறுதிமொழியினை மாநகராட்சியின் மேயர் தலைமையில் ஏற்றனர். அதனைத் தொடர்ந்து, மேயர் தலைமையில் இக் கூட்டத்தில் முப்பத்தி மூன்று தீர்மானங்களில் தேர்தல் நடைபெறும் மூன்றாவது மண்டலத்தில் உள்ள தீர்மானங்கள் தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்த சில நொடிகளிலே கூட்டம் நிறைவுற்றதாக அறிவித்துவிட்டு கலைந்துச்சென்றார். நேற்றைய தினம்  மாநகராட்சி  மாதாந்திர கூட்டம் மொத்தம் ஐந்து நிமிடங்கள் கூட நடைபெறாமல் முடிந்ததால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இதனை கண்டித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்மானங்களை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



 

சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் மாநகராட்சி மேயருக்கு ரூ.75 லட்சத்தில் குடியிருப்பு கட்டுவதற்கான தீர்மானம் உள்ளிட்ட சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள்  கூச்சலிட்டதால் அதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் மாமன்ற உறுப்பினர்கள் பல தீர்மாணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாதால் அக்கூட்டத்தையும் மேயர் நிறைவுற்றதாக அறிவித்துவிட்டு கலைந்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்

 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில், 36 வது வார்டில் போட்டியிட்ட  வேட்பாளர் ஜானகிராமன்  தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுபடி வரும் 9ம் தேதி அந்த வார்டுக்கு தேர்தல் நடக்கிறது. அந்த வார்டில் போட்டியிட மொத்தம் 8 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் பாஜகவை சேர்ந்த மதன்ராஜ் ஆகியோர் நேற்று தங்கள் மனுவை  திரும்ப பெற்றுக் கொண்டார். அதிமுக சார்பில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால்  போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது