பள்ளி மாணவிகளிடம் துள்ளி விளையாடினார் என்பது தான் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு. நம்பி அனுப்பிய பெற்றோருக்கும், நம்பி வரும் பக்தர்களுக்கும் பட்டை நாமம் போட்டு, இன்று சிறை பறவையாய் கம்பி எண்ணப்போகும் சிவசங்கர் பாபா விவகாரம் தான் தமிழ்நாட்டில் ஹாட் டாபிக்.





பாபா வழி தனி வழி!


ரஜினிக்கு எப்படி பாபா படம் பிளாப்போ, அப்படி தான், பலரும் பூஜிக்கும் பாபா பெயரை பயன்படுத்தி சர்ச்சைகளில் சிக்கியவர்களும் அவ்வப்போது பிளாப் ஆகி வருகின்றனர்.  அந்த வரிசையில் தற்போது சிவசங்கரும் இணைந்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பம் சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தார் என்பது ஆரம்ப குற்றச்சாட்டு. மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார், இன்று நாலாபுறமும் பாபா பெயரை உச்சரிக்க செய்துள்ளது. போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாறியதும், டேராடூனுக்கு மாறினார் பாபா. வழக்கமான நெஞ்சுவலி சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, நேபாள் போக திட்டமிட்டவரை, நேரில் போய் காரில் தூக்கியது சிபிசிஐடி. டேராடூன், காசியாபாத் என போலீசாருக்கு ஊர் சுற்றிகாட்டி, பின்னர் கை கட்டி அவர்களிடமே சிக்கிக் கொண்டார் சிவசங்கர். 





சிறை பறவை!


நேபாளத்துக்கு பூபாளமாய் போக வேண்டியவரை, தாம்பூலமாய் அள்ளி வந்தது சிபிசிஐடி. சென்னையில் 10 மணி நேரம் நைட் டியூட்டி பார்த்து அவரிடம் விசாரணை நடத்தியது போலீஸ். ‛விடிய விடிய சொல்லித் தருவேன்....’ என்கிற மாதிரி, பாபாவும் கேட்டதுக்கெல்லாம் , ‛எனக்கு தெரியாது... எனக்கு தெரியாது...’னு ஒரே டேப் ரெக்கார்டை திருப்பி திருப்பி போட்டிருக்கார். அந்த பாட்டு போலீசாருக்கு பிடித்ததாலோ என்னவோ... அவர்களும் திரும்ப திரும்ப ஒன்ஸ்மோர் கேட்டு, கடைசியில், அவரே வெறுத்து போய் சிலவற்றை ஒப்புக்கொண்டதாக கூறுகிறார்கள். பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றது சிபிசிஐடி. ஆதரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட, ‛ஜூலை 1ம் தேதி வரை, அதாவது 15 நாட்கள்,’ பாபாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். ஆன்மீக பறவை , சிறை பறவையாய் கூண்டில் அடைக்கப்பட்டது. தன்னை கிருஷ்ண பகவானாகவும், அவதாரமாகவும் கூறி வந்த சிவசங்கர் பாபா, இனி, கைதி என்கிற புதிய அவதாரம் எடுக்கிறார்.





கலர் கலர் சட்டை... மாடர்ன் பாபா!


சிவசங்கர் பாபா, மற்ற பாபாக்களிடம் இருந்து மாறுபடிகிறார். தனது ஆசிரமத்தில் அவர் ஒரு மாடர்ன் சாமியாராக தான் உலா வந்திருக்கிறார். கலர் கலர் சட்டைகள். கூலிங் கிளாஸ், குளுகுளு மேக்கெப் என இந்த அவதாரம் பல அரிதாரங்களை பூசியுள்ளது. இவரை பூஜிப்பவர்களும் அதே கெட்டப்பில் இருக்கும் போது தான் சூடம் காட்டுவது, மாலை அணிவிப்பது என எல்லா இறை பணிகளையும் செய்துள்ளனர். பாபாவும் சோபா மீது அமர்ந்து அருள்பாலித்திருக்கிறார்.  கங்கா சந்திரமுகி அறைக்கு போனா... சந்திரமுகி முன்னாடி போய் நின்னா... சந்திரமுகியா மாறினா...னு ரஜினி சொல்ற மாதிரி தான், சிவசங்கரும் அவதாரமா மாறியிருக்கிறார்னு மட்டும் தெரியுது. என்ன.. மாடர்ன் பாபா... கார்டனா இல்லாம போயிட்டார் அது தான் இத்தனைக்கும் பிரச்னை.போலீஸ் நெருங்கியதும் மொட்டை அடித்து, புருவம் எடுத்து கெட்டப் மாற்றிய பாபாவின் செட்டெப் எல்லாம் எடுபடாம இப்போ லாக்கப் வரை வந்திடுச்சு. 




‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!


வசூல் ராஜாவும் பாபாவும்!


அடுத்த 15 நாட்கள் அவருக்கு மணியடித்தால் சோறு. நடராஜா தான் நோ காரு. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‛அவர் நல்லவரு... குழந்தைகளை தந்தை மாதிரி தான் கட்டிப்பிடிப்பாருன்னு...’ அந்த பள்ளியிலிருந்து விளக்கம் கொடுத்திருக்காங்க. வசூல் ராஜாவுக்கு முன்பே கட்டிப்பிடி வைத்தியம் தெரிந்தவர் போலும். ஆனாலும், இப்போது தான் அவர் படம் ரீலீஸ் ஆகிறது. ‛பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு...’ என்கிற பாடல் வசூல் ராஜாவில் வரும், அடுத்த 15 நாட்கள் அப்படி தான் கம்பியை எண்ண வேண்டும் பாபா. ஒருபுறம் பாபாவை சிறையில் அடைத்த கையோடு, மறுபுறம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. புகார்களை கடந்து பாபா மீது வேறு என்ன குற்றச்சாட்டுகள் இருக்கிறது என கடைந்தெடுத்துக் கெண்டிருக்கிறார்கள். மோராகவோ, நெய்யாகவோ அது விரைவில் வந்துவிடும். அதுவரை சிவசங்கர் ஜெய்சங்கராகவே பார்க்கப்படுவார்.