செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது  மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை, தனி தனி போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டது. இதுவரை சிவசங்கர் பாபா இரண்டு போக்சோ வழக்கின் கீழ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.


 

இந்நிலையில் நேற்று காலை சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை மூன்றாவது போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து  சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிபதி  16 ஆம் தேதி வரை சிவசங்கர் பாபா நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


முன்னதாக போக்சோ சட்டத்தில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் அளித்தால், அவர் தன் மீது இருக்கும் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்று சிபிசிஐடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

 

அதனையடுத்து இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும், தாம் ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா கூறியிருந்தார். மேலும் நீலாங்கரையில் 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்துவதாக சிவசங்கர் பாபா தெரிவித்து இருந்தார்.



இதனையடுத்து இன்று சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். ஆகஸ்ட் 11-ஆம் தேதி சென்னை சிபிசிஐடி போலீசார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X