Ajith kumar lock Up Death Post Mortem Report: சிவகங்கையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில், 50 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
50 இடங்களில் காயங்கள்:
சிவகங்கையில் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை, நகை திருடிய வழக்கில் காவல்துறையினரே அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. இதுதொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அஜித்குமார் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மூலம், காவல்துறையினர் மனிதத்தன்மையின்றி,எந்த அளவிற்கு குரூரமாக அஜித்குமாரை தாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
காவல்துறையின் இரக்கமற்ற தன்மை:
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் பல்வேறு விதமான 50 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சிகரெட்டால் சுட்டதாலும், கட்டையால் சரமாரியாக தாக்கியதாலும் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை, வயிறு, கண்கள் என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு மிகவும் சித்தரவதையான மரணத்தையே அஜித்குமார் எதிர்கொண்டுள்ளார் என்பதையும் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈவு இரக்கமன்றி, மனிதத்தன்மை சற்றும் இன்றி காவல்துறையினர் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
இந்தக் காயங்கள் வெறும் வெளிப்புறக் காயங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன எனவும், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் உடலில் இருந்த காய விவரங்கள்:
- அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்களில் 12 சிராய்ப்பு காயங்கள்
- மீதமிருந்தவை ரத்தக் கட்டு (கன்றிய நிலையில் இருக்கும் காயங்கள்)
- வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருக்கிறார்
- தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது
- சிகரெட் சூட்டால் சித்திரவதை செய்யப்பட்டு - இடது கையில் மூன்று இடங்களில் சிகரெட் சூடு
- மண்டை ஓட்டின் இரண்டு பக்கங்களிலும் நடுமண்டை மற்றும் தலைப்பகுதி முழுவதும் கட்டையால் அடித்த காயம்
- நாக்கை கடித்ததை போன்ற நிலை
- தலையில் அடிபட்டதால் வலிப்பு
- கண்கள் சிவந்து வீங்கியதோடு, காதுகளில் ரத்தக்கசிவு
- இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளன
இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதாவது, ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்கள். இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றே தெரிய வருகிறது.