விழுப்புரம் : திண்டிவனம் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி கூலித் தொழிலாளி பரிதாப பலி; கால்நடையும் உயிரிழப்பு. உரிய இழப்பீடு மற்றும் அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் வலியுறுத்தல்.

Continues below advertisement


மின்துறை அலட்சியத்தால் பறிபோன கூலித் தொழிலாளி உயிர்! 


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவர் ஒரு கூலித் தொழிலாளி. நேற்று (நவம்பர் 29) சுப்பிரமணி வழக்கம் போல தனது மாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். 'டிட்வா' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், தான் கூலி வேலை செய்யும் நிலத்தின் அருகே (முப்புளி - பெரமண்டூர் எல்லை) மாட்டை கையில் பிடித்தபடி கவனமாக மேய்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது, அந்த வயல்வெளிப் பகுதியில் செல்லும் மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடும் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிர் இழந்தது.


உரிய இழப்பீடு வழங்க வேண்டும்


இரவு நேரமாகியும் சுப்பிரமணியும், மாடும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். இரவு சுமார் 10 மணி அளவில், அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி சுப்பிரமணி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து மயிலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சுப்பிரமணியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுப்பிரமணி குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சேதமடைந்த மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும்


அதேபோல, கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்று மின் கம்பிகள் அறுந்து விழுந்து பல அப்பாவி உயிர்களும், கால்நடை உயிர்களும் பறிபோகி இருக்கிறது. மின் கம்பிகளை அவ்வப்போது சோதித்து புதுப்பிக்க வேண்டும். சேதமடைந்த மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஆனால், அதையெல்லாம் மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாற்றியுள்ளனர். மழைக்காலங்களில் இதுபோன்ற உயிர்ப்பலிகளைத் தடுக்க, மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின் கம்பிகளையும், காலாவதியான மின்கம்பங்களையும் மாற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.