மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்தவர் 68 வயதான அன்பழகி. இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அன்பழகி கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள், மகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் திருடர்கள் பயத்தினால் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்தாமல் வீட்டு வாசலில் கோலமிட்டு, பின்னர் பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். ராமசந்திரன் அவரது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வழிபாடு செய்ய பாதயாத்திரையாக கடந்த 24ஆம் தேதி புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ராமசந்திரன் வீட்டிற்கு உறவினர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டின் உரிமையாளர் ராமசந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமசந்திரன் உடனடியாக வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இரண்டு அறைகள் மற்றும் மாடியில் உள்ள வீட்டிலும் பீரோக்களில் வைத்திருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவலைக்கப்பட்டு கைரேகைகள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றத்திற்க்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழாவானது வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக சென்று ஆரோக்கிய மாதாவின் அருளை பெருவது வழக்கம்.
சென்னை, பெங்களூர், கர்நாடாக, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு, வருகின்ற 29 -ம் தேதி கொடியேற்றத்தை பார்ப்பதால் தங்கள் கவலை நீங்கி வாழ்வில் புதுமை நிகழ்வதாகவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் மாதாவை பாதயாத்திரையாக சென்று வழிபடுவதாக தெரிவிக்கின்றனர். வருகின்ற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவால் வேளாங்கண்ணி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் 10 நாட்கள் நிரம்பி காணப்படும்.