பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதையொட்டிய 12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவர்களின் பிரதிநிதிகளை நேற்று காஞ்சிபுரம் நான் சந்தித்து பேசினேன். தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும்.



 

நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். சார்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்து இருந்தேன். அதன்படி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

 

குழுவின் விவரம்:

 

1. ஜி.கே.மணி - கவுரவத் தலைவர், பா.ம.க

2. திலகபாமா - பொருளாளர், பா.ம.க

3. ஏ.கே.மூர்த்தி - வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர், பா.ம.க.

4. வழக்கறிஞர் க.பாலு - செய்தித் தொடர்பாளர், பா.ம.க

5. பசுமைத் தாயகம் அருள் - தலைவர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

6. பெ. மகேஷ் குமார் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் மேற்கு, பா.ம.க.

7. அரிகிருஷ்ணன் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் கிழக்கு, பா.ம.க.

 

இந்தக் குழுவினர் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம், அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் நேடியாக கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பேசினார்.



 

இதைத்தொடர்ந்து பேசிய அவர், 'பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் ஜி. கே மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும். மேலும் இந்த குழு கொடுக்கும் அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய எந்த அடிப்படையில் இந்த இடம் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசு அறிவிப்பு மட்டுமே உள்ளது. விவசாயத்தையும், நீர்நிலைகளையும் அழித்து வளர்ச்சி பணிகளான விமான நிலையம் கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது. வளர்ச்சி அவசியமானது வளர்ச்சி நமக்கு தேவை, ஆனால் விவசாயத்தை நீர்நிலைகளை அழித்து வரும் வளர்ச்சியை தான் நாங்கள் எதிர்க்கிறோம். 8 வழி சாலை என்.எல்.சி வளர்ச்சி திட்டம் இல்லை. அழிவுத் திட்டம்' என்று அவர் கூறினார்.