சீர்காழி: மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி தாராளன் வடக்கு வீதியில் வசித்து வந்ததவர் தன்ராஜ் சௌத்ரி. இவர் பூம்புகார் அருகே அடகு கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் சௌத்ரின் சீர்காழி வீட்டில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. அதிகாலை தன்ராஜ் சௌத்ரியின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கொள்ளைக் கும்பல், அவரது மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகிய இருவரையும் கொடூரமாகப் படுகொலை செய்ததுடன், வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹6.75 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் சீர்காழிப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Continues below advertisement

வழக்கு மற்றும் விசாரணை

தகவல் அறிந்த சீர்காழி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரட்டைக் கொலை மற்றும் நகை, பணம் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தீவிர விசாரணையின் முடிவில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால், மற்றும் கருணாகரன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதில், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மஹிபால், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது, மனீஷ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரமேஷ் பட்டேல் தலைமறைவானார். நீதிமன்றத்தின் மூலம் இவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

Continues below advertisement

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாகாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த மனீஷ் மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருவருக்கும் இரட்டைக் கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 ஆண்டுகளுக்குப் பின் கைது

நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், சுமார் மூன்று ஆண்டுகளாகக் காவல்துறைக்கு தண்ணி காட்டி வந்த ரமேஷ் பட்டேலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உடனடியாகச் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சீர்காழி காவல்துறையினர் கொண்ட தனிப்படை ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு விரைந்தது. அங்கு நீண்ட தேடுதலுக்குப் பின்னர், சிவப்பிரகாசம் காவல் சரகம் சந்தலை ஏரி கரையில் பதுங்கி இருந்த ரமேஷ் பட்டேல் (33) என்பவரைப் போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரமேஷ் பட்டேல், ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பலத்த பாதுகாப்போடு சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நடத்தப்பட்ட தொடர் விசாரணைக்குப் பிறகு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, ரமேஷ் பட்டேல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியைக் கைது செய்த சீர்காழி காவல்துறையினரின் துரித நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தக் கைது நடவடிக்கையின் மூலம், சீர்காழி இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் முழுமையான விசாரணை முடிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.