செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.




இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.


இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசமும் ஒப்படைக்கப்பட்டது. வேறு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சி.பி.சி.ஐ.டி வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுவதாக தமிழக டி.ஜி.பி. விளக்கம் அளித்தார். சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனிற்கு தனிப்படை ஒன்றும் சென்றுள்ளது. இந்த நிலையில், சிவசங்கர் பாபா வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்கு ஏதுவாக சி.பி.சி.ஐ.டி. அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 




சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக, பள்ளியில் செயல்பட்ட ஆசிரியைகளின் பட்டியலை சேகரிக்கும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த தனியார் பள்ளியின் பொறுப்பாளர் ஜானகியின் மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜன், ஆசிரியர் கிவிராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புகார்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.