செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள சரவணன் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பெண் வேறு இடத்திற்கு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பணியில் சேர்வதற்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகளுடன், பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த தகவலையும் சரவணனிடம் பகிர்ந்துள்ளார். சரவணன் தானும் தன்னுடன் வருவதாக கூறியுள்ளார். ஆனால் செவிலியர் மறுத்துள்ளார்.
சரவணன் தனது நண்பர்களான சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அப்பெண்ணை நள்ளிரவில் செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சரவணன், நேற்று ஜாமீனில் வெளியே வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு சரவணனின் நண்பர்கள் சிலர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று , கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து தஞ்சம், அடைந்தனர். இதனைஅடுத்து உடனடியாக செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக, புகார் அளித்த பெண்ணை சிலர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்