கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் மோகன் . சிறு வயது முதலே வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்திருக்கிறது. ஒரு முறை மோகனை இந்தியாவின் திரைப்பட ஆளுமை பி. வி. கராந்த் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து , நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். முதல் நாடகமே மோகனுக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. அங்குதான் இவர் நடிகராகும் கனவும் உருவெடுக்க தொடங்கியது. மோகனின் நடிப்பை பார்த்த பாலு மகேந்திரா , 1977 ஆம் ஆண்டு தான் இயக்கிய கன்னட மொழி படமான கோகிலா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மோகனின் நடிப்பை தமிழ் சினிமாவுக்கும் கொண்டு வர நினைத்த பாலு மகேந்திரா 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
வெள்ளி விழா நாயகன் :
மூடுபனிக்கு பிறகு கோலிவுட் மோகனுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. மோகன் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் முழு கதாநாயகனாக அறிமுகமானார். எதார்த்தமாக சினிமாவுக்கு வந்தவர், எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். ரஜினி, கமல் , விஜயகாந்த் என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரு பக்கம் விளாசிக்கொண்டிருந்தாலும், அலட்டிக்கொள்ளாமல் வந்த மோகன் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். மோகன் நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கண்டன. சில படங்கள் 200 நாட்கள் தாண்டியும் ஓடியிருக்கிறது. பின்னர் வெள்ளி விழா நாயகன் என தயாரிப்பளர்கள் மோகனை கொண்டாட துவங்கிவிட்டனர்.
விருதுகள் :
விதி (1984), நூறாவது நாள் (1984), ரெட்டை வால் குருவி (1987), மற்றும் சகாதேவன் மகாதேவன் (1988) , பயணங்கள் முடிவதில்லை என பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இதில் பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் மோகனுக்கு ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.. 1986 ஆம் ஆண்டில் மௌன ராகம் திரைப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
குரலும் நடிப்பும்!
மோகனை இன்றளவும் மைக் மோகன் என்றுதான் கொண்டாடுகிறார்கள் . ஆனால் அவர் பாடகர் அல்ல. அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அவர் பாடல்கள் பாடுவதை போல காட்சிகள் இருக்கும். அதற்கென தனி ஸ்டைலை வைத்திருந்தார் மோகன். எனவே ரசிகர்கள் மைக் மோகன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். கன்னட மொழிக்காரரான மோகனின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடித்த பெரும்பாலான படங்களுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு தேவை என்பது போல மோகனின் சினிமா கெரியரில், எஸ்.என்.சுரேந்தர்-மோகன் காம்போவைத்தான் ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக குரலும் உடலும் பிரிந்தது. அதன் பிறகு மோகன் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி படம் நடித்தார். அவை ஹிட் ஆனாலும் அவரின் சினிமா சரிவிற்கு குரலும் ஒரு காரணம் என்கின்றனர். என்னதான் மைக் மோகன் சினிமாவை விட்டு விலகியிருந்தாலும் கூட , இன்றும் ரசிகர்கள் அவரை கொண்டாடத் தவறவில்லை!