திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், 48 வயது பெண் ஒருவர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். துபாயில் வசித்து வந்த அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் தனது 3 குழந்தைகளுடன் இந்தியா திரும்பிய அவர், கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எம்.என்.சி நிறுனத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஷர்மா (49) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.




அதில், ”என் தொழிலை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமென்பதற்காக, எனது விவரங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். அதனைப் பார்த்து ஆனந்த் ஷர்மா தொழில் ரீதியாக உதவுவதாக தொடர்புகொண்டு தெரிவித்தார். பின்னர் அடிக்கடி உரையாடி  நெருக்கமாக பழகினார். தான் விவகாரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார். அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், எனது விவகாரத்திற்கு உதவி செய்கிறேன் எனவும் கூறினார். பின்னர் நாளடைவில் என்னை காதலிப்பதாக கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.




பின்னர் விவகாரத்து ஆனதாக கூறிய மனைவியுடன் ஆனந்த் ஷர்மா வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதுகுறித்து கேட்டதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். ஒரு முறை எதேச்சையாக அவரது மொபைல்ஃபோனை பார்த்த போது, அதில் பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப் போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஆனந்த ஷர்மாவின் சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளித்தார்.


இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கோவை மத்திய மகளிர் காவல் துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல அப்பெண்ணை மிரட்டிய ஆனந்த் ஷர்மாவின் சகோதாரர் பிரதாப் ஷர்மா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.