டிஜிட்டல் உலகம்..
தற்போது உலகமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. தினமும் நம் வாழ்க்கை ஏதோ ஒரு வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப உபகரணங்களுடன்தான் துவங்குகிறோம். அதில் இன்றியமையாத ஒன்று மொபைல்போன்கள் . குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தின் ஆதிக்கத்திற்கு பிறகு ஆக்கப்பூர்வ மாற்றங்களை நாம் சந்திக்க தொடங்கிவிட்டோம். அதே நேரம் தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி சிலர் இளைஞர்களை தவறான வழிக்கு முன்னெடுப்பதோடு , பகீர் மோசடிகளையும் செய்து வருகின்றனர். அது ஆன்லைன் விளையாட்டில் துவங்கி இன்ஸ்டண்ட் லோன் , வாட்ஸப் குழு மூலம் இணைக்கும் ஆபாச வீடியோ கால் வரை நீண்டுள்ளது. ஆம் ! முன் பின் அறியாத ஸ்ட்ரேஞ்சர்ஸை வாட்ஸப் குழு மூலம் இணைத்து, மதி மயக்கி பணம் பறிக்கும் குற்றச்சம்பவம் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர் கதையாகியிருந்த நிலையில் , தற்போது அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
எப்படி செயல்படுகிறது இந்த கும்பல்..
முதலில் வாட்ஸப் போன்ற செயலிகளில் ஆபாச குழுக்களை துவங்குகின்றனர். அதில் தெரிந்த நபர்களை இணைத்து அவர்கள் மூலமாக இளைஞர்களுக்கு வலை விரிக்கின்றனர். இதில் 40 வயதிற்க்கும் மேல் உள்ள நபர்கள் இணைவதுதான் அதிகம் என்கின்றனர் சிலர். குழுவில் இருக்கும் நபர்களுக்கு அவ்வபோது குறுஞ்செய்திகளை பகிர்கின்றனர் மோசடி நபர்கள் . அதாவது “ 20 முதல் 27 வயதுடையை இளம் பெண்களுடன் ஆடையின்றி பேச விருப்பமா ? அவர்கள் உங்களுடன் பேச தயாராக உள்ளார்கள் . நீங்கள் தயாராக இருந்தால் கீழ்க்கண்ட எண்ணிற்கு உடனே கூகுள் பே அல்லது ஃபோன் பே மூலம் பணத்தை அனுப்புங்கள் .விலை நிலவரங்கள் : ஆடையின்றி 2 நிமிடங்கள் பேச 300 ரூபாய், 5 நிமிடங்கள் பேச 1000 ரூபாய் ” என ஷேர் செய்கின்றனர். இதில் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால் சம்பந்தப்பட்ட நபர் அவர்களின் தினசரி வாடிக்கையாளராக இருந்தால் 600 ரூபாய் வரையில் விலை சலுகைகள் கிடைக்கும் என்கிறார்கள்.
புதிய மோசடி..
இந்த வலையில் சிக்கும் நபர்களிடம் பெண்கள் பேச துவங்கும் பொழுது , கூடுதல் நேரம் பேச வேண்டுமானால் உடனடியாக இவ்வளவு பணத்தை செலுத்துங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன் பிறகு பணத்தை சம்பந்தப்பட்ட நபர் செலுத்திய பிறகு சிக்னல் கிடைக்கவில்லை என கூறி அழைப்பை துண்டித்து விடுகின்றனர். பின்னர் அந்த நபர் குழுவில் இது குறித்து கேள்வி கேட்டால் அவர்களை குழுவில் இருந்து நீக்கிவிட்டு , பிளாக் செய்து விடுவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த பெண்ணுடன் பேசும் பொழுது வீடியோவாக ரெக்கார்ட் செய்து மிரட்டலுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த குற்றச்சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் , தற்போது ராமநாத புரம் கடற்கரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் , இந்த மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பணிந்து பல லட்சம் ரூபாய் வரை இழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வீட்டிலும் கூற முடியாமல் காவல் துறையிலும் புகார் அளிக்க முடியாமல் பலர் பணத்தை இழக்க துணிகின்றனர். இதைத்தான் மோசடிக்காரர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்
வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் , பெண் அங்கங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதும் , அதற்காக பணத்தை இழந்து இளைஞர்கள் சிக்கிக்கொள்வதும் மிகுந்த இழிவான மற்றும் வருத்தப்படக்கூடிய செயல்.அவ்வபோது இப்படியான மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட, தமிழக சைபர் கிரைம் மற்றும் குற்றவியல் தடுப்பு பிரிவு போலிசார் இந்த மாதிரியான சம்பவங்களை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கையாக உள்ளது.