மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலை குறிவைத்து பாலியல் ப்ளாக்மெயில் அழைப்புகளை செய்த இருவரை டெல்லி போலீசார் சமீபத்தில் ராஜஸ்தானின் பாரத்பூரில் இருந்து கைது செய்துள்ளனர். 


செக்ஸ்டோர்ஷன் அழைப்பு


"செக்ஸ்டோர்ஷன்" அழைப்பு எனப்படுவது, பொதுவாக பாலியல் ரீதியான விஷயங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றங்களை உள்ளடக்கியவை ஆகும். இவை சாதாரண மக்களை பல ஆண்டுகளாக பாதித்து வரும் நிலையில், உயர் பதவிகளில் உள்ள அமைச்சர்கள் போன்றோரையும் சென்று அடைந்துள்ளது பலருக்கும் ஆன்லைன் பாதுகாப்பு மீதான பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.


மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், இந்த சம்பவம் குறித்து பேசுகையில், தனக்கு தெரியாத வாட்ஸ்அப் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பிற்கு பதிலளித்த போது, அந்த அழைப்பாளர் ஆபாச வீடியோவை பிளே செய்ததாகவும், அதை பார்த்ததும் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்ததாகவும் கூறினார். 



மத்திய அமைச்சருக்கு பாலியல் பிளாக்மெயில் அழைப்பு


புகாரின்படி, அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பைப் எடுத்ததும், எதிர்புறம் இருந்து அவர் பார்ப்பது போன்ற காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அழைப்பை துண்டித்ததும் மீண்டும் வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அந்த விடியோ க்ளிப்பை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன்பின் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு தனது அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Manju Warrier Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சு வாரியர்.. என்னது இப்படி ஒரு ரோலா? குஷியான ரசிகர்கள்..


அனைத்து தகவல்களையும் கொடுத்த அமைச்சர்


இந்த சம்பவம் நடந்தபோது மத்திய பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்ததாக அமைச்சர் கூறினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களை தாம் கண்டுபிடித்துள்ளதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், போலீசார் தமக்கு தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.


“இது தொடர்பான அனைத்து தகவல்களையும் டெல்லி காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு, நான் போலீஸில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் எண்களைக் கண்டுபிடித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, ”என்று அவர் கூறினார்.



இருவர் கைது


இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து படேலின் தனிப்பட்ட செயலாளர் அலோக் மோகன் ஜூன் கடைசி வாரத்தில் புகார் அளித்தார். ஜூலை முதல் வாரத்தில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தோம்," என்றார்.


மேலும், "எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, முகமது வக்கீல் மற்றும் முகமது சாஹிப் ஆகிய இரண்டு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். தலைமறைவான முகமது சபீர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.


காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலியல் மோசடியின் ஒரு பகுதியாக இருந்தது வந்தது கண்டறியப்பட்டது.  “இணை அமைச்சர் படேல் சார்பாக, அவரது செயலாளர் அலோக் மோகன், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை தொடர்புகொண்டு, குற்றப்பிரிவில் புகார் செய்தார். ஐபிசி பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 419 (ஆள்மாறாட்டம்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, அதன் பின் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர்” என்று அந்த அதிகாரி கூறினார்.