நடிகர் விஷால் நடிப்பில் உருவான பட்டத்து யானை படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பட்டத்து யானை படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார். அப்படியான வரிசையில் வெளியானது தான் ‘பட்டத்து யானை’ திரைப்படம். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். தமன் மற்றும் சபேஷ் முரளி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்தனர்.
மலைக்கோட்டை படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி 2வது முறையாக இணைந்தது. நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். இதனால் இப்படம் ரிலீஸான சமயத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
படத்தின் கதை
காரைக்குடியில் பாரம்பரிய சமையல்காரராக வலம் வரும் சந்தானத்தின் கீழ் விஷால் மற்றும் அவரது நண்பர்கள் குழு வேலை செய்கின்றனர். அங்கு விஷால் குழுவால் ஏற்படும் பிரச்சினையால் ஊரை காலி செய்து விட்டு அனைவரும் திருச்சிக்கு வருகின்றனர். அங்கு சந்தானத்துடன் சேர்ந்து ஹோட்டல் வைப்பதற்காக பிளான் பண்ணும் விஷாலுக்கு, ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் காதல் மலர்கிறது. ஆனால், திருச்சி தாதாவான ஜான் விஜய்க்கும் ஐஸ்வர்யா மீது காதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவைப் பாதுகாத்து காதலில் வெற்றி பெற, வில்லன் கூட்டத்தை எதிர்த்து விஷால் வென்றாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
ஆறுதலாக அமைந்த காமெடி
சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு மீண்டும் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவு கைவிடப்பட்டு நடிகர் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் ஒரே ஆறுதலாக அமைந்தது காமெடி காட்சிகள் மட்டும் தான். தாத்தா, அப்பா, மகன் 3 விதமான சந்தானம் காட்டப்பட்டாலும், பாரம்பரிய தொழிலை காப்பாற்ற படாதபாடு மகன் சந்தானம் தொடர்பான காமெடி காட்சிகள் ரசிகர்களை இன்றளவும் ரசிக்க வைக்கிறது.
மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களில் “என்ன ஒரு அழகி” பாடல் மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஷாலின் காட்சிகளை பார்த்தபோது எங்கேயோ பார்த்த ஞாபகம் போல அவரின் முந்தைய படங்கள் தான் நியாபகம் வந்தது. அதனாலேயே பட்டத்து யானை படம் தோல்வியை தழுவியது.