சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி வீட்டின் முன்பு வீசியது தொடர்பாக ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விசாரணைக்கு அனைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட என்பதற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையது அலி மற்றும் காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் முகமது இஸ்மாயில், முகமது ஆரிஸ், காஜா உசேன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.