வெந்து தணிந்தது காடு படத்தின் சிறப்பு ஆடியோ விளக்க ஷோ முன்னதாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக திரையிடப்பட்டது.


வேல்ஸ், க்யூப் சினிமா நிறுவனங்கள் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்த நிலையில்,  பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆடியோ வடிவில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.


மேலும், நடிகர் சிம்புவின் குரலையும், கிராமிய வழக்கையும், மல்லிப்பூ பாடலையும் ரசித்ததாக பலரும் படம் பார்த்துவிட்டு விமர்சனங்களை முன்வைத்தனர்.


மேலும், ஆடியோ டிஸ்க்ரிப்ஷன் வடிவில் பிறரது உதவி இல்லாமல் இந்தப் படத்தை பார்த்து ரசித்தது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் சென்றதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், முன்னதாக இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு,” இனி எல்லா படங்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் கண்டுகளிக்கும்படி வரும் என நான் நம்புகிறேன். இனி எல்லா படங்களையும் நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க. எனக்கும் இது நல்ல ஒரு அனுபவமா இருந்தது” எனத் தெரிவித்தார்.


 






தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ், தான் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிகர் சிம்புவே நடிப்பதாகவும், அந்த படத்தை 1000 பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும்படி சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்த படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்தார். நடிகை ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  


விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப்படம், கலவையான விமர்சனங்களை முதல் சில நாள்களில் பெற்றாலும், அதன் வசூல் தொடர்ந்து நிதானமான பாதையில் பயணித்து தற்போது வெற்றிப் படமாக அமைந்துள்ளது.


 






இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.