தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தொடர் சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகரில் காவல் ஆணையாளர் சந்தோஷ் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசார் மாநகர் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் நெல்லை மாநகர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திமதி பள்ளி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். 



அப்போது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கல்லூரணி சாலையைச் சேர்ந்த ஜெயராம் (28), கடையத்தை சேர்ந்த பாஸ்கர் (35), மற்றும் நெல்லை மாவட்டம் முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்த ராஜ் (55) ஆகிய மூவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த சாக்கு பைகளை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட சுமார் 64 கிலோ மதிப்புடைய குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர் மீதும் ஹைகிரவுண்ட் காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 62,448 ரூபாய் மதிப்புடைய சுமார் 64 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.




அதே போல நெல்லை மாவட்டம் வி.கே.புரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் மூன்று  லம்ப் பகுதியில் வந்த காரை  சோதனை செய்தனர். அதில் பரமசிவன் (49), அழகுராஜா (32) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன்படி வி.கே.புரம்  காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 700 கிராம் கஞ்சா  மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண