கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருந்தார். அப்போது, தரகர் ஒருவர் மூலமாக காசர்கோடு அருகே உள்ள நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஷாஜிதா என்ற பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


இதையடுத்து, 30 வயதான ஷாஜிதாவின் பெற்றோர் என்.ஏ. உம்மர் மற்றும் ஷாஜிதாவின் தாய் பாத்திமா அப்துல் ஸத்தரிடம் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர். இருதரப்பு சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அப்துல் ஸத்தாருக்கும், ஷாஜிதாவிற்கும் திருமணம் நடந்தது.




திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் இருவரையும் கொவ்வல்பள்ளியில் குடியிருப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறினர். அந்த புதிய வீட்டில் புதுமணத் தம்பதியினரின் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.


அப்போது, இக்பால் என்பவர் அப்துல் ஸத்தாரை நேரில் சந்தித்து அவரிடம் வீடியோ ஒன்றை காட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த அப்துல் ஸத்தார் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த வீடியோவில் அப்துல் ஸத்தாரின் முதலிரவு காட்சிகள் அனைத்தும் இருந்துள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப விடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் வேண்டும் என்று அப்துல் ஸத்தாரை இக்பால் மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்த அப்துல் ஸத்தார், அவருக்கு கொஞ்சம், கொஞ்சமாக 3.75 லட்சம் பணத்தையும், ஏழரை சவரன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார்.


ஆனாலும், இக்பால் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டியதால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாத அப்துல் ஸத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அப்துல் ஸத்தாரை மிரட்டிய இக்பாலை பிடித்து போலீசார் விசாரிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.




அப்துல் ஸத்தாருக்கு நடந்ததே போலி திருமணம் என்றும், இந்த பணம் பறிப்பு செயலில் அப்துல் ஸத்தாரின் மனைவி ஷாஜிதா உடந்தை என்றும் கூறியுள்ளார். மேலும், என்.ஏ. உம்மரும், பாத்திமாவும் ஷாஜிதாவின் உண்மையான பெற்றோர் இல்லையென்றும் நான்கு பேரும் சேர்ந்துதான் அப்துல் ஸத்தாரை ஏமாற்றி பணத்தை பறித்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் குடியேறிய புது வீட்டில் ரகசிய கேமராவை வைத்து அவர்களது முதலிரவு காட்சியையும் நான்கு பேரும் இணைந்துதான் எடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


போலீசார் விசாரணையில் ஷாஜிதா மீது ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு பகுதியில் திருமண மோசடி வழக்கு உள்ளதாகவும், என்.ஏ. உம்மர் மற்றும் பாத்திமா உண்மையான தம்பதியினர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.