தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (33), கடந்த 2008-2009 ஆண்டில் தமிழக  இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வு எழுதி அனைத்து தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் சாதி ரீதியான கட்ஆப் மதிப்பெண் வரும்பொழுது, அதில் வேடியப்பன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தனது மதிப்பெண் சான்றிதழ்தான் எழுதிய ஓஎம்ஆர் சீட் நகல் கேட்டு தமிழக காவல்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினார். ஆனால் அந்த மனுவிற்கு காவல் துறை சார்பில் எந்தவிதமான பதிலும் கொடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். ஆனால் பலன் கிடைக்காத காரணத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தான் 2007ஆம் ஆண்டு தேர்வு எழுதிய நகல் கொடுக்கப்பட்டுள்ளது.

 


 

ஆனால் அந்த பதிலில், வேடியப்பன் பதிவு எண்ணில் கார்த்திக் என்பவர் பெயர் இருந்துள்ளது. தொடர்ந்து 2008-2009ஆம் ஆண்டு வேடியப்பன் பதிவெண்ணில், கார்த்திக் என்பவர் முறைகேடாக பணியில் இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும், ஆகவே சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய டிஎஸ்பி ரெஜினா பேகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல் காவலர் தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முறையிட்டுள்ளனர். ஆனால் இதற்கு காவல் துறையில் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 


 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேடியப்பன், மனைவி மோகனா இருவரும், இன்று காலை  11  மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர்.  அப்பொழுது திடீரென அலுவல மேல்மாடியில் ஏறி நின்று, தனது கணவருக்கு காவல் துறையில் வேலை வழங்க வேண்டும். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

 


 

இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது தன்னை காப்பாற்ற யாராவது வந்தால், கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டல்  விடுத்தார். இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை கீழே இறக்கினர். தொடந்து கணவன், மனைவி இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

 


 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்களது பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக் கொண்டு போராட்டம் நடத்துவது தான் அதிகமாக இருந்தது. ஆனால் முதல் முறையாக பெண் ஒருவர் அலுவலக மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.