மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் அரசு அனுமதி இன்றி பல மதுபான பார்கள் இயங்கி வருகிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும்  உரிமம் வாங்காமல் பார் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.  இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளரும், துணை ஆட்சியருமான வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினர் மாவட்டத்தில்  உள்ள மதுபான பார்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பார்களுக்கு சீல் வைத்துள்ளனர்.

  




மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 102 அரசு மாதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும்   அரசு டாஸ்மாக் கடை உரிமம் இன்றி பார் செயல்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் மேலாளரும் துணை ஆட்சியருமான வி.வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடைபெற்ற இரண்டு கடைகளையும்  பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.  தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்பட்ட இரண்டு கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.   




அதேபோல் கொள்ளிடம் அருகே  புத்தூர் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் சோதனை நடத்திய போது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாரில்  விற்பனையில் ஈடுப்பட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை டாஸ்மாக் மேலாளர் வாசுதேவன் உத்தரவின்படி உடன் வந்த காவல்துறையினர் கைது செய்து கொள்ளிடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மது அருந்த திரண்டிருந்த  ஏராளமான குடிமகன்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மதுபான பாரை இழுததுப் பூட்டி சீல் வைத்தனர். 




இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அரசு மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடைபெற்று வருவதாகவும், இது அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார்வைகளை செயல்பட அனுமதித்து வருகின்றனர் என்றும் இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் அனுமதி இன்றி செயல்பட்ட மூன்று மதுபான பார்களுக்கு சீல்வைத்தது குறிப்பிடத்தக்கது.