ஆவின் பால் மாத சந்தா அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ( KYC) எனப்படும் தகவல்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே கேஒய்சி(know your customer) என்று அழைக்கப்படுகிறது. ஆதார் அட்டை, முகவரிச் சான்றை ஒருவரின் மாத சந்தா விவரத்துடன் இணைப்பதே இப்பணி. ஆவின் மாத சந்தை அட்டை உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.3 சலுகையில் ஒரு லிட்டர் பால் பெறலாம். சந்தா தொகையை முன்னரே செலுத்துவதால் இச்சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சில கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள் பல பெயர்களில் சந்தா செலுத்தி இச்சலுகையை அனுபவிப்பது தெரியவந்துள்ளது. சலுகை விலையில் பாலை வாங்கி எம்ஆர்பி விலையில் விற்று அவர்கள் லாபம் சம்பாதிப்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தவே ஆவின் பால் மாத சந்தா அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ( KYC) எனப்படும் தகவல்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ஆவின் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு வேறு நிறத்தில் ஆவின் பால் பாக்கெட்டை விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார். இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆவின் பால் வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, "மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கலரில் பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. அதேபோல், மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கலாம். வாடிக்கையாளர் என்றாவது கூடுதலாக பால் பாக்கெட்டுகள் வாங்கினாலோ அல்லது வழக்கமான பால் பாக்கெட்டை வாங்காவிட்டாலோ அதை அந்த அட்டையில் குறிப்பிட்டுக் கொள்ளலாம்"  என்று யோசனை தெரிவித்தார்.

Continues below advertisement

ஆவின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆவின் மாத சந்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் திட்டம் 2004, 2010, 2016 லேயே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அப்போது தடைபட்டுப்போனது என்றார்.

ஆவில் பால் அட்டையை, Aavin milk.com என்ற இணையதளத்தில் பெறலாம். இதே தளத்தில் பழைய அட்டையைப் புதுப்பிக்கவும் செய்யலாம். அல்லது 1800 425 3300 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால், நேரடியாக வந்து பணத்தை பெற்றுக்கொண்டு சேவைகளை வழங்கும் முறையும் உள்ளது.