சேலம் மாவட்டம் அருகே உள்ள அரியனூர், சீரகப்பாடி உட்பட பல பகுதிகளில் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த மாணவர்களை குறி வைத்து விலை உயர்ந்த போதை மருந்துகள் விற்பனை நடத்தப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதன் பேரில் திட்டமிட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் ரகசியமாக விசாரணையில் இறங்கினர். இதில் கேரளாவில் இருந்து வந்து படிக்கும் கல்லூரி மாணவர்களும், வேலை பார்க்கும் வாலிபர்களும் சின்ன சீரகபாடி பகுதியில் தங்கிருந்து "மெத்தம்பேட்டமைன்" என்ற உயர்ரக போதை மருந்தை விற்பனை செய்தது தெரியவந்தது. போதைப் பொருட்கள் விற்பனை செய்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஆலன் கே பிலிப், அமல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் குஷமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து உயர்வு போதை மருந்துகள், 2 எடை இயந்திரங்கள், மூன்று உயர் ரக இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த உயர்ரக போதை மருந்தை பெங்களூரில் இருந்து ஒரு கிராம் 3000 என வாங்கி வந்து, 5000 ரூபாய்க்கு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிக்கிய மூன்று பேர் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை ஆட்டையாம்பட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மூன்று பேர் மீதும் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. ஆனால் அவர்கள் கூட்டாளிகள் சிக்கியதை அறிந்த மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.
கைதான ஆலன் கே பிலிப் உள்ளிட்ட மூவரும் உயர் ரக போதை மருந்தான மெத்தம்பேட்டமைன் வாங்குவதற்கு பெங்களூருக்கு சென்று வந்துள்ளனர். ஐரோப்பா நாடுகளிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அதிகளவு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். கேரளா, கர்நாடக மாணவர்கள் கும்பலிடம் சிக்கி தொடர்ந்து போதை மருந்தை பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்கள் பட்டியல் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போதை மருந்தை மொத்தமாக விற்பனை செய்து வரும் பெங்களூர் நெட்வொர்க் கும்பலை கூண்டோடு கைது செய்ய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் இரண்டு சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளார். ஒரு தனிப்படையினர் பெங்களூருக்கு சென்று கர்நாடகா காவல் துறையினரின் உதவியுடன் உயர் ரக போதை பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் சேலத்தில் கைதான மூன்று நபர்களிடமும் தொடர்பில் இருந்த நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே உயர்ரக போதை பொருள் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுவதால் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்