சேலம் மாவட்டம் கோரிமேடு பிருந்தாவன் கார்டனை சேர்ந்தவர் பூபதி. ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு அழகாபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கி அவர்களை காரில் கடத்தி சென்றது. அப்போது சேலம் ஐந்து ரோடு பகுதிக்கு வந்த போது பிரவீன் குமார் காரிலிருந்து குதித்து தப்பினார். இதையடுத்து அழகாபுரம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பிரவீன் குமார், பூபதி ஆகிய இருவரை 20 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. கடத்தல் கும்பலை பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பூபதியை காரில் கடத்திய கும்பல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற நிலையில் கடத்தல் கும்பல் நெருங்கியதை உணர்ந்து பூபதியையும், அவரது காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர் காவல்துறையினர் பூபதியை காருடன் மீட்டு வந்து சேலத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரத்திற்கு சொந்தமான நிலம் வீராணத்தில் உள்ளது.
அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 12 கோடி இந்த நிலத்தை விற்று தருவதாக கூறி நகைக் கடையின் உரிமையாளரிடமிருந்து அசல் பத்திரத்தை வாங்கி சென்றுள்ளார். ஆனால் நிலத்தை விற்று தராமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஏகாம்பரம் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பூபதி பத்திரத்தை தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏகாம்பரம் கூலிப்படையை வைத்து பூபதி கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பூபதி கடத்திய கூலிப்படை அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கூலிப்படையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.