முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பை தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார். இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மறு விசாரணையை தொடங்கி உள்ளார்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு, எஸ்டேட்டுக்கு உள்நுழைந்த மர்ம கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று அங்குள்ள பெட்டிகளை உடைத்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர்.



அச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் ஆத்தூர் அருகில் உள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான், அவரது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதை தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரத்தில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த கனகராஜ் சகோதரர் தனபாலிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். போது அவர் தனது சகோதரர் விபத்தில் இறக்கவில்லை என்றும் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று கூறினார். அதேபோல கனகராஜன் மனைவி கலைவாணி, தனது கணவர் விபத்தில் பலியாக வில்லை. அவரை கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார். தற்போது, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற உத்தரவு பெற்று மறுவிசாரணையை தொடங்கியுள்ளதால் கோடநாடு வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.