மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ திமுகவில் இருந்தபோது போர்வாள் என கட்சியினரால் அழைக்கப்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிழலாகவும், தளபதியாகவும் தொடர்ந்த வைகோ, தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் கூறி திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கினார்.
அவருடன் 10க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் வெளியேறியதால் அறிவாலயம் அதிர்ச்சிக்கு உள்ளானது. அதன் பிறகு திமுகவை விமர்சனம் செய்துவந்த வைகோ, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கூறி தற்போது திமுக கூட்டணியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
இதற்கிடையே மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என வைகோ முழங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது மகன் துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் 28 ஆண்டுகளாக இருந்த கட்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளார். மேலும் 14 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியும் மதிமுகவிலிருந்து வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதிமுக தொண்டர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்களது அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.
அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதில் மன அழுத்தத்தில் இருந்தேன். தான் பட்ட கஷ்டங்கள் மகனுக்கு வேண்டாம் என வைகோ கூறியது உண்மைதான்.
3 வருடங்களுக்கு முன் வைகோவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவர் நலமுடனே இருக்கிறார்.
எனக்கு வாக்களிக்காத இரண்டு பேரும், “தம்பிக்கு வாக்களிக்கவில்லையே” என வருத்தப்படும் அளவுக்கு செயல்படுவேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: வைகோ மகனுக்கு பொறுப்பு... எதிர்ப்பு தெரிவித்து இளைஞரணி செயலாளர் ராஜினாமா!