சேலம் மாநகர் 4 ரோடு, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளிகளை குறிவைத்து போதை மருந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாநகர காவல்துறை கமிஷனர் விஜயகுமாரிக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், செவ்வாய்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


போதை மாத்திரை விற்பனை:


அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சந்தைப்பேட்டை, பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (22), தட்சணாமூர்த்தி (24), அர்ஜூனன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் 30 மாத்திரை அட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த மாத்திரைகள் வலி நிவாரணி மாத்திரைகள் என கூறப்படுகிறது. பிடிபட்ட 3 பேரையும் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் கைது செய்து மேல் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 



மெடிக்கல் ரெப் கைது:


கைதான 3 பேரும் கூலி தொழிலாளர்கள். அவர்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். ஒரு மாத்திரையை ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் விற்பனை செய்யும் மாத்திரையை திரவ மருந்து ஒன்றுடன், கலந்து அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தினால் அதிக போதை உண்டாகுமாம். அதற்காகவே இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். செல்போன் எண்கள் மூலம் தங்களை தொடர்பு கொள்ளும் 'நபர்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் இந்த மாத்திரைகளை எங்கும் வாங்க முடியாது என கூறப்பட்டது. எனவே மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்தபோது, சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த மெடிக்கல் ரெப் சுப்பிரமணி என்பவரிடம் குறைந்த விலைக்கு அவர்கள் மாத்திரைகளை வாங்கியதாக தெரிகிறது. கைதான 3 பேரும் மாத்திரைகள் மட்டும் விற்பனை செய்தார்களா? அல்லது திரவ மருந்து, ஊசி உள்ளிட்டவையும் விற்பனை செய்தார்களா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இளைஞர்களுக்கு விற்பனை:


கைதான 3 வாலிபர்களும் முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு போதைக்காக மாத்திரைகளை விற்றதாக தெரிகிறது. தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, தட்சணாமூர்த்தி, அர்ஜூனன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாத்திரைகள் விற்பனை செய்த மெடிக்கல் ரெப் சுப்பிரமணியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், போதை மாத்திரையை விற்பனை செய்த ரமேஷ், சரண், கரண், நிர்மல்குமார் என மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


பெற்றோர்கள் கவலை:


ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கம் அதிகம் இருப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது போதை மாத்திரை புழக்கம் இருப்பதாக கூறப்படுவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. போதை மாத்திரை விற்பனை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து போதை மாத்திரை கும்பலுடன் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்வதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.