சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் குளிர்பானம் விற்பனை முகவராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரேமா, மலர்விழி, நந்தினி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறியுள்ளார். மலர்விழி காதல் திருமணம் செய்த காரணத்தினால் தாய் சந்திரா, சகோதரிகள் இருவரும் மலர்விழியின் மீது கடும்கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தந்தை நாராயணன் உடன் அடிக்கடி மலர்விழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணனின் மனைவி சந்திரா மற்றும் இரண்டு மகள்கள் சேர்ந்து நாராயணனை கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.



இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி நாராயணன் தனியாக வசித்து வந்த நிலையில், குளிர்பானங்கள் விற்பனைக்காக கடையின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது நாராயணனை, தீபக் என்ற நபர் மூன்று வாலிபருடன் சேர்த்து காரில் வலுக்கட்டாயமாக அடித்து தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து நாராயணனின் மகள் மலர்விழி காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் நாராயணன் (New life recovery foundation) என்ற தனியார் மீட்பு மையத்தில் வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில் மலர்விழி நேரடியாக தந்தையை சந்திக்க முயற்சித்தபோது, அனுமதி அளிக்காததால் இதுதொடர்பாக சேலம் மாநகர காவல்துறையினர் மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் நீதிமன்றத்தில் நாராயணனை நேரடியாக காவல்துறையினர் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் நாராயணனின் விருப்பப்படி மலர்விழியுடன் நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நாராயணன் மற்றும் அவரது மகள் மலர்விழி ஆகிய இருவரும் தந்தை கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் துன்புறுத்திய வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். தனியார் போதை மீட்பு மையம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாராயணன் மற்றும் அவரது மகள் மலர்விழி கூறுகையில், தனியார் மீட்பு மையத்தில் நாராயணனை கடந்த 13 நாட்களாக வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளனர். குறிப்பாக முறையாக உணவு வழங்காமலும், இருட்டு அறையில் அடைத்து மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். தன் மீது இருக்கும் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். எனவே காரில் அழைத்துச் சென்ற தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தை சேர்ந்த தீபக் என்பவர் பணம் கொடுத்து தனது மனைவி மற்றும் மகள்கள் கூறி தான் அடைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறியுள்ளார். எனவே தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோன்று தனியார் மீட்பு மையத்தில் அனைவருக்கும் மாத்திரைகள் கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும் இந்த மீட்பு மையம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.