சேலம் மாநகர் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் உணவருந்தியுள்ளனர். அதில் ஒருவர் கடையின் மேசை மீது தலைவைத்து அங்கேயே போதையில் மயங்கியுள்ளார். மற்றொருவர், அவர்கள் வந்த காருக்கு சென்று உறங்கியுள்ளார். பின்னர் ஒரு மணி நேரமாகியும் உணவக மேஜையில் உறங்கிக் கொண்டிருந்த நபரை உணவகத்தின் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

  



உடனே, இதுகுறித்து அவர் அம்மாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே போதையில் வந்தவர்கள் சேலம் மாவட்ட குற்றப்பிரிவை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி மற்றும் காவலர் செந்தில் குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒருவழியாக இருவரையும் எழுப்பியுள்ளனர். இருந்தும் கடையிலிருந்து புறப்படாமல் நின்றுகொண்டிருந்த காவலர்களை கடை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிளம்பிச்செல்லுமாறு சொல்லியதாக தெரிகிறது. ஆனால் நாங்கள் இங்கேதான் நிற்போம் எங்கு வேண்டுமானாலும் தூங்குவோம் நான் அயோக்யன்தான் என்ன பண்ணுவ? என்று பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துள்ளார். 


இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கூறியதால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இரண்டு காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.