சேலம் மாநகர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் அதிமுக சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிலையில் மேடையில் நின்றிருந்த நிர்வாகிகளிடம் பிக் பாக்கெட் கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. குறிப்பாக, பகுதிக் கழகச் செயலாளர், ஒன்றிய செயலாளர் என 20க்கும் மேற்பட்டோர் இடம் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை அந்த கும்பல் திருடி உள்ளதாக கூறப்படுகிறது. மேடையில் இருந்து நிர்வாகிகள் கீழே வரும் வேளையில் சட்டை, டிரவுசர் மற்றும் உள்ளாடை பாக்கெட்டில் இருந்து பிக்பாக்கெட் திருடர்கள் பணத்தை எடுத்ததாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிலும், அதிமுக முக்கிய நிர்வாகி பொதுக் கூட்டத் செலவிற்காக இரண்டு பாக்கெட்களில் தலா ஐம்பதாயிரம் வைத்திருந்ததாகவும், அதில் ஒரு பாக்கெட் கிழித்து 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டினை திருடிய போது அந்த நிர்வாகியின் தொடையில் பிளேட்டால் அறுக்கப்பட்டதில் அதிமுக முக்கிய நிர்வாகிக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் இருந்த ஆம்புலன்சில் முதலுதவி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிமுக தரப்பில் எந்தவித புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சேலம் மாநகர பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹிக் பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் யார் பணம் வைத்து உள்ளார்கள் என்பதை அறிந்து ஒவ்வொருவரிடமிருந்தும் 50 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை திருடிய நபர் அதிமுக நிர்வாகியாக இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.