திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
39 தொகுதிகளிலும் வெல்வோம்:
அப்போது அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும். தமிழகத்தில் ஒரு அரசியல் சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி கிடக்கின்றது. 400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல அடுத்த 60 நாட்கள் நாம் பாடுபட வேண்டும். பல்லடம் கூட்டம் தமிழக பாஜகவிற்கு சரித்திரம் வாய்ந்ததாக இருக்கும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற காரணமானவர் பிரதமர் மோடி”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். தற்போது இந்த பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2024-ல் ஊழல் கட்சியின் ஆட்சிக்கு பூட்டு
அண்ணாமலையை அடுத்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: “ என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. என் மீது அவதூறு பரப்பி பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தை கொள்ளையடிக்கவே இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அதை தடுக்க வேண்டும். இண்டியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்றி விட்டால் தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது. இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் தேசத்தை இனிமேலும் சுரண்ட முடியாது.
மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு இளைஞரும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். 2024-ல் ஊழல் கட்சியின் ஆட்சிக்கு பூட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். காங்கிரஸ்- திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக முன்னுரிமை கொடுத்து வருகிறது. மத்தியில் திமுக 10 ஆண்டுகள் அங்கம் வகித்த போதும் தமிநாட்டிற்கு எதுவும் செய்யவில்லை”. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் படிக்க