மாலத்தீவில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிடித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரபாண்டியன் (28). இவர் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் பிளம்பர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு நபருக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சேலம் மாநகர பகுதியில் 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக அவரிடம் இருந்து எந்தவித தகவல்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தலைமறைவாக இருந்த மோகனசுந்தரபாண்டியனை தேடி வந்துள்ளனர். 



இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மோகனசுந்தரபாண்டியன் இருப்பதாக நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக கோவை சென்ற பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுற்றி வளைத்து மோகனசுந்தரபாண்டியனை பிடித்துள்ளனர். மேலும் அவரை பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்ததில் சேலம் மட்டுமின்றி கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இவர் மாலத்தீவில் வேலை வாங்கித் தருவதாக கூறி சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மோகனசுந்தரபாண்டியனை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 



இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், “மாலத்தீவில் வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் வந்தது. பிளம்பர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், டிரைவர் வேலை வாங்கி தருவதாகவும், மாதம் ரூபாய் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால் உடனடியாக அவர் கேட்ட தொகையை தவணை முறையில் கட்டினோம். அவர் பேசும்போது நம்பகத்தன்மையுடன் பேசினார். தினம்தோறும் கூலி வேலை செய்யும் தங்களுக்கு மாத சம்பளத்தில் வேலை கிடைத்ததால் அவர் கேட்ட பணத்தை கொடுத்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து நண்பர்களிடம் தெரிவித்த போது எங்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாத வகையில் நண்பர்களையும் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபரை தேடி வந்தோம். நேற்று முன்தினம் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக நாங்கள் கோவை சென்று இவரை பிடித்து சேலம் அழைத்து வந்துள்ளோம். இவரிடம் விசாரணை நடத்தியதில் பல மாவட்டங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக நாங்கள் இவரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம்” என்று கூறினார்கள்.


மேலும், தாங்கள் இழந்த பணத்தை உடனடியாக காவல்துறையினர் மீட்டு தரவேண்டும் எனவும், இவருக்கு உடந்தையாக இருந்த நபர்களையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.