சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அடுத்துள்ள அம்பாள் ஏரி ரோட்டைச் சேர்ந்தவர் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார் (29). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரஞ்சித்குமார், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அம்மாப்பேட்டை மாசிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவில், மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, உடையாப்பட்டி வேடியப்பன் கோயில் எதிர்பகுதியில், குடிநீர் தண்ணீர் திறக்கும் வால்வு பகுதியில் உள்ள 3 அடி சாக்கடையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக, அம்மாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி கமிஷனர் சரவண குமரன், அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கழுத்தில் கொடூரமான காயத்துடன் கொலையாகி கிடந்தது ரவுடி ரஞ்சித்குமார் என்பது தெரியவந்தது.
சம்பவ இடத்தில், துணை கமிஷனர் லாவண்யா மற்றும் தடயவியல் நிபுணர் வடிவேல் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், ரஞ்சித்குமார் பாட்டிலால் கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 5க்கும் மேற்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் எனவும், இந்த கொலை நேற்று முன்தினம் இரவு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவுடிகளுக்கிடையில் நடந்த தகராறில் அவரை அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும் ரவுடிகள் சிலரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பிரபல ரவுடி சாக்கடையில் சரளமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.