கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பட்டிணத்தை சேர்ந்த சுதாகரன் என்பவர் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சேலம் மணியனூரை சேர்ந்த தேன்மொழி உட்பட 10 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதற்காக அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூபாய் 37.5 லட்சம் சுதாகரன் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவர்களுக்கு பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் சுதாகரன் வழங்கியது போலியான ஆணை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இந்த மோசடி குறித்து தேன்மொழி சேலம் மாநகரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் புஷ்பகுமாரி மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கார் ஓட்டுநராக பணியாற்றிய சுதாகரன் மற்றும் அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, தேன்மொழி உட்பட 10 பேரிடம் ரூபாய் 37.5 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் விசாரணையில் முடிவில் எஸ்.பி வேலுமணி முன்னாள் கார் ஓட்டுநரான சுதாகரன் மோசடி செய்தது தெரியவந்தது. இதை எடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் ஓட்டுனர் சுதாகரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரபாவதி காவல்துறையினர் தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சரின் கார் ஓட்டுநர் மோசடி புகாரில் சிக்கி உள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.