கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). விவசாயி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகள் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் எனது பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன் (52) என்பவர் என்னிடம் வந்து பேசினார்.


அப்போது அவர், நர்சிங் முடித்துள்ள உங்கள் மகளுக்கு 3 மாதத்தில் சுகாதாரத்துறையில் வேலை வாங்கி தருகிறேன். சென்னை வடபழனியை சேர்ந்த சசிப்பிரியா மூலம் பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதை நம்பிய நான், அவர் அழைத்ததன் பேரில் சென்னைக்கு சென்றேன். அங்கு உலகநாதன் என்னை சசிப்பிரியாவிடம் அறிமுகப்படுத்தினார்.




பின்னர் 2 பேரும் எனது மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் வாங்கினர். இதே போல் பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த சிகாமணி மகனுக்கு மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் வேலை வாங்கி தருவதாக அவரிடம் ரூ.5 லட்சமும், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்த அரசு என்பவரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சமும் வாங்கினர்.


எங்கள் 3 பேரிடமும் மொத்தம் ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் வாங்கி இருந்தனர். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது, ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து விட்டனர். ரூ.9 லட்சத்து 35 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல், மோசடி செய்து விட்டனர். ஆகவே உலகநாதன், சசிப்பிரியா ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.




இதையடுத்து இந்த புகார் மனுவை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்ரமன், அன்பழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து விவசாயி உள்பட 3 பேரிடமும் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக போலீசார் சென்னை சென்றனர். சைதாப்பேட்டையில் தங்கி இருந்த உலகநாதனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான சசிப்பிரியாவை தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க :


புதுச்சேரி : தொடர் கஞ்சா விற்பனை : சிறுவர்களே குறி.. சிக்கிய இளைஞர்கள் கைது..!


வாண்ட்டடா வந்து.. வழுக்கி விழுந்து... பொதுமக்களிடம் சிக்கிய டூவீலர் திருடர்கள்..! திண்டிவனத்தில் ருசிகரம்..!