விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே என்ஃபீல்டு புல்லட்டில் வந்து கொண்டிருந்த வாலிபர் திடீரென நிலை தடுமாறி வண்டியுடன் வழுக்கி விழுந்தார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, அவர் ஓட்டி வந்த வாகனத்தை தூக்க முயன்றபோது  வாகனத்தில் சாவி இல்லாததாலும், வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள ஒயர் மூலம் இணைத்து அந்த இருசக்கர வாகனத்தை இயக்கியது தெரியவந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து கூட்டேரிப்பட்டில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவலர்கள் இல்லாததால் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.




புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தான் வெல்டிங் வேலைக்கு செல்லவேண்டும். என்னை விடுங்கள் என கூறியதுடன், என்னை மீறி பிடித்தால் நான் லாரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என பொதுமக்களை மிரட்டினான். அதனால் பொதுமக்கள் அச்சமடைந்து இதுகுறித்து மீண்டும் மயிலம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல் அளித்து வெகுநேரமாக போலீசார் அங்கு வராததால் நிலைமை விபரீதமானது. மேலும் இது குறித்து திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு நீண்ட போராட்டத்திற்குப் பின்பு தகவலின்பேரில் போக்குவரத்து ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.




இதே நேரத்தில் அந்த வாலிபருடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இன்னொரு வாலிபர் தான் ஓட்டிவந்த வாகனத்தை கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள கடைவாசல் முன்பு நிறுத்திவிட்டு ஒன்றும் தெரியாதது போல நின்றிருந்தார். பின்னர் அந்த வாலிபர் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தான் அவசரமாக மயிலம் செல்ல வேண்டுமென அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர் பிடிபட்ட வாலிபருடன் வந்தவர் எனக்கூறியதை அடுத்து போலீசார் துரத்திச் சென்று அவரை மடக்கி பிடித்தனர்.




பின்பு போலீசார் இரு வாலிபர்களையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் எடுத்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் சென்னை பல்லாவரம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் இருந்து திருடியது எனத் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வம் என்பதும், மற்றொருவர் மயிலம் அடுத்த வெளியனூர் பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரின்  மகன் மோகன்ராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து இரு சக்கர வாகனத்திருட்டில் ஈடுபடுவது தெரியவந்ததது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.