திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த ராமசுப்பு என்பவரின் மகன் வைகுண்டம் (46), இவருக்கு  திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றில் 5 கொலை வழக்குகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கொலை முயற்சி அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் வைகுண்டத்தை ரவுடி பட்டியலில் சேர்த்தனர். மேலும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு பாளை தாலுகா அருகே வைகுண்டத்தின் ஆதரவாளரான பெருமாளை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் உயிர் தப்பிய நிலையில் இந்த வழக்கின் முதல் சாட்சியாக வைகுண்டம் உள்ளார். இதற்கு நேற்று நீதிமன்றத்தில் நேற்று சாட்சி கூறுவதாக  இருந்தது. இதில் சாட்சி கூறினால் எதிர் தரப்பினருக்கு தண்டனை கிடைத்து விடும் என்பதால் சூதாரித்துக் கொண்ட அவர்கள் வைகுண்டத்தை கொலை செய்ய நோட்டமிட்டு உள்ளனர்,




தன் மீது எதிரிகள் தாக்குதல் நடத்த  கூடும் என்பதால் தற்போது வைகுண்டம் தனது சொந்த கிராமத்தில் இல்லாமல் திருநெல்வேலி நகர் பகுதியில் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில்  நேற்று அவர் தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள பாளையம் கால்வாயில் குளிக்க நேற்று காலை சென்ற போது வைகுண்டத்தை 5 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ஜெயராஜ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதிக்கு மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர், இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை குறித்து போலிசார் நடத்திய விசாரணையில், கடந்த 2006ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவராக டேவிட் ஜோசப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கும் வைகுண்டத்திற்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் இரு பிரிவுகளாக அடிக்கடி மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்து உள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜோசப் வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர் தரப்பினரான வைகுண்டம், பெருமாள் உட்பட 10 பேர் சேர்ந்து டேவிட் ஜோசப்பின் தம்பியான ஜான்சனை வெட்டிக் கொலை செய்தனர். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு டேவிட் ஜோசப்பை பாளை மார்க்கெட் அருகே வெட்டி கொலை செய்து உள்ளனர். அதன் பின்னர் டேவிட் ஜோசப்பின் மற்றொரு சகோதரரான கிறிஸ்டோபர் என்பவர் 2009 ஆம் ஆண்டு சீவலப்பேரி அருகே மர்மமான முறையில் லாரி மோதி இறந்தார், இன்னொரு சகோதரரான ஜெயக்குமாரை சென்னையில் 2011 ஆம் வெட்டிக் கொன்றனர்.


இவ்வாறு பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வைகுண்டத்திற்கு தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது, அந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசே இல்லாத நிலைக்கு வைகுண்டம் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த கொலை சம்பவமானது அரங்கேறியுள்ளது,




குறிப்பாக ஆண் வாரிசே இல்லாத அந்த குடும்பத்தில் உள்ள பெண் வாரிசு ஒருவரின் மகன் பழிக்குப்பழியாக இந்தக் கொலையை செய்து இருக்கலாம், அதே போல நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் எதிர் தரப்பினருக்கு தண்டனை கிடைக்கும் என்பதாலும் திட்டமிட்டு இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலிசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் நிலையில் கொலை நடந்த கிராமத்தை சுற்றிலும் போலிசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், நெல்லையில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,