காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரிஷிவன், 22. கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில், ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகைக்கு தங்கி, பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 25ம் தேதி, குடும்ப பிரச்னை காரணமாக, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.



 

அப்போது, அங்கு வந்த ரிஷிவனின் நண்பர்கள், ரிஷிபனின் மரணத்திற்கு, அவரின் மனைவி சாருமதி தான் காரணம் என கூறி, சண்டையில் ஈடுபட்டனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், ரகளையில் ஈடுபட்ட ரிஷிவனின் நண்பர்களான மேடவாக்கம் மணிகண்டன், 21, மேலக்கோட்டையூர் கலையரசன், 29, வேங்கடமங்கலம் சலீம், 36, ரத்தினமங்கலம் முசரப், 55, ஆகியோரை கைது செய்தனர்.



 

இதில், போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற கலையரசன் மற்றும் மணிகண்டனுக்கு, வலது காலில் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின், நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


மருத்துவமனையில் அவதி


மருத்துவமனையில் அராஜகம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,  அவர்கள் கால் முறிவுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்பொழுது கால் முறிவால் வேதனை அடைந்த இளைஞர்கள், வலி தாங்க முடியாமல் இருந்த அப்பா, மகள் பார்த்து,ஏன் இவர்களுக்கு தேவையில்லாத வேலை என  பேசிக்கொண்டே சென்றனர்.






 தொடரும் குட்டி ரவுடிகள் அட்டகாசம்


கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்கள் நாளடைவில்,  அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு தவறான பாதைக்கு சென்று வருவது தொடர்கதை ஆகி வருகிறது.  சிறு சிறு திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இதுபோன்ற இளைஞர்கள் நாளடைவில் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களிலும் ஈடுபட துவங்குகின்றனர்.  காவல்துறையினரும் கஞ்சாவ ஒழிப்பை,  முறையான கண்காணிப்புகள் செய்யாததால் கஞ்சா விற்பனை என்பது சர்வ சாதாரணமாக கிடைத்து வருகிறது.  


கடுமையான நடவடிக்கை


இதுகுறித்தும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்த நிலையிலும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.  இதன் காரணமாகவே பல்வேறு குட்டி ரவுடிகள் உருவாகுவதும் , அவர்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுப்பது மட்டுமில்லாமல் இது போன்ற நபர்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ,  அதை செய்ய வேண்டும் என்பதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.