ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை அருகே உள்ள கன்னிகாபுரம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் புஷ்கரன். ஆடிட்டராக பணியாற்றி வரும் இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான மாந்தோப்புக்கு இடையே தனியாக வீடுகட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் புஷ்கரன் வீட்டில் நேற்று நள்ளிரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி புஷ்கரன் (25) அவரது தாயார் சுதா (52), பெரியம்மா லதா (56), பாட்டி ரஞ்சிதா (75) ஆகியோரை மிரட்டியதுடன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.




வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன் மற்றும் அவரது தாய் சுதா, பெரியம்மா லதா ரஞ்சிதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புஷ்கரன் தன்னிடம் எஞ்சியிருந்த செல்போன் மூலம் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து நடத்தததை தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்களின் உதவியோடு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 




தனியாக இருக்கும் வீட்டை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் இது போன்ற கொலை வெறி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த இச்சம்பவம் அப்பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர், அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




காவல் துறையினரின் ஆய்வின் போது, வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கொள்ளையடித்த பின் வீட்டை சுற்றிலும் மிளகாய்ப் பொடி மற்றும் பேஸ்ட், ஷாம்பு ஆகியவற்றை வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்கள். மேலும் கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்திலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற வழிப்பறி கொள்ளை சம்பவம் வாலாஜா வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த காலங்களில் நடைபெற்று வந்துள்ளது. இதில் பலர் உயிரை இழந்தும், பலர் ஊனமுற்றும் இருந்துள்ளனர். இதனை மையக்கருவாக கொண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைபடம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல ஆண்டுகளாக இது போன்ற சம்பவம் நடைபெறாத நிலையில் மீண்டும் தற்போது நடைபெற்றுள்ளது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.