கரூரில் படுகொலை செய்யப்பட்ட அவனியாபுரம் ராமர் பாண்டி கொலை வழக்கில் இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


 


 




மதுரை மாவட்டம், மேல அனுப்பனாடியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமர் பாண்டி (38). இவர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் ஒருவருடன் மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அரவக்குறிச்சி அருகேயுள்ள தேரப்பாடி பிரிவு அருகே ராமர் பாண்டியை வெட்டிக் கொலை செய்தது. 


 


 




 


இக்கொலை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி 5 பேர் சரணடைந்தனர். பிப்ரவரி 23ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரணடைந்தார்.


 




 


தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த வினோத் கண்ணன் மற்றும் கீரனூரை சேர்ந்த மகேஷ் குமார் ஆகியோர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


 




 


மேலும், கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.