ராமநாதபுரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்தை கடந்த 13 ஆம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கடப்பாரையைக் கொண்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து வங்கியின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலையடுத்து வங்கிப் பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.




தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஏடிஎம் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில், கண்ணாடி அணிந்த ஒருவர் கையில் இரும்பு கடப்பாரையுடன் ஏடிஎம் மையத்திற்குள் செல்வது, பிறகு வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்தது போன்றக் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக ராமநாதபுரம்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சி,பிளாக் பகுதியில் வசிக்கும் சிவச்சந்திரன் என்பவரை கேணிக்கரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, அவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது.  போலீசார் கூறுகையில், ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பரபரப்பாக காணப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி அணிந்து வந்த அந்த நபர், 2 முககவசம் அணிந்து இரும்பு கம்பியால் உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.


விசாரணையில் அவர், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் (35) என்பது தெரிந்தது. பி.இ படித்துள்ள சிவச்சந்திரன் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி நல்ல சம்பளம் பெற்று நல்ல ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்ததால்  வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.  இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில் தன்னுடன் வேலைபார்த்தபோது பழக்கம் ஏற்பட்ட பெண்ணை  இரண்டாவதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.


வேலை இழப்பு மற்றும் செலவிற்கு பணம் இல்லாதது, மனைவிகள்  பிரிந்து சென்றது போன்ற காரணங்களினால் மனம் உடைந்து காணப்பட்ட சிவச்சந்திரன் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஜினியருக்கு படித்து, நல்ல வேலையில் இருந்து ஜென்டில்மேனாக வாழ்ந்து வந்த ஒருவர், கொரானாவால் வேலையை இழந்து வருமானம் இன்றி தவித்த போது மன உளைச்சலுக்கு ஆளாகி கொள்ளையனாக மாறிய அவலம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.