மத்திய அரசு நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த விவசாயிகள் டெல்லியில் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தனர். சூழல் இப்படி இருக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள்களைச் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என கூறினார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் அறிவித்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதை இப்படி விரும்பிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rakesh Tikait: கான்ஸ்டபிள் டூ விவசாயிகளின் ஹீரோ.... யார் இந்த ராகேஷ் திகைத்?
Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!