ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 'ஆனந்தநகர்' பகுதியை சேர்ந்தவர் 'ஜேசு என்ற அசோக்குமார்'. இவருடைய உறவினரான சிறுமி ஒருவரை பாலியல்  வன்கொடுமை செய்த விவகாரத்தில் போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தபின் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.


இந்த நிலையில், சாயல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று காவலர்கள் இன்று அவரை கைது செய்ய சென்ற போது, "ஏய் போலீசு, கிட்ட வராத வெட்டிருவேன்' என முதலில் எச்சரித்துள்ளார். ஆனால் அதை சட்டை செய்யாமல் அவரே கிட்ட நெருங்கிய போலீசாரை பார்த்து "சொன்னா கேக்க மாட்டியா, இந்தா வாங்கிக்க..." என, இடுப்பில் வைத்திருந்த அரிவாளால் அவர் கண்மூடித்தனமாக மூன்று போலீசாரையும் வெட்டியதில் மூன்று போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.




அதில் காளிமுத்து  என்ற குற்றப்பிரிவு காவலருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அவரை ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


போக்சோ வழக்கு குற்றவாளி அரிவாளால் வெட்டியதில் 3 போலீசார் காயம் அடைந்த சம்பவம் சாயல்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு பிடிவாரண்டு குற்றவாளியை பிடிக்க செல்லும் முன் சரியான திட்டமிடல் இல்லாமலும் முன் எச்சரிக்கை இல்லாமல் போலீசார் சென்றதே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்த போது, போக்சோ வழக்கில் கைதாகி சிறிது நாட்கள் சிறையில் இருந்த இவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அடுத்தடுத்து வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றம் இவருக்கு பிடிவாண்டு பிறப்பித்துள்ளது.




இந்த நிலையில், இன்று காலை அவரை விசாரணை செய்வதற்காக இரண்டு சாயல்குடி போலீஸாரும் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரியும் காளிமுத்துவும் சென்றபோது  விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பும் வழங்க விருப்பம் இல்லாமல் இருந்த அந்த குற்றவாளி போலீசாரை மிரட்டும் தொணியில் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். 


ஆனால், எப்படியும் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை அணுகிய காவலர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் காவலர் காளிமுத்துவுக்கு வயிற்றிலும் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனிடையே அவரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.