தமிழ் சினிமாவின் அடையாளங்களாகக் கருதப்படும் இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக சமூகத்துக்கு ஏதாவது ஒரு மெசேஜ் கொடுக்க வேண்டும் என துணிச்சலாக திரைக்கதையை அமைத்து அதில் வெற்றியும் காண்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். 


 



 
பிரமாண்டமான ஏற்பாடு :


அந்த வகையில் 1800 காலகட்டங்களில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை அடிப்படியாக கொண்டு பீரியாடிக் ஆக்ஷன் படமாக பா. ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'தங்கலான்'. (Thangalaan) சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதுவரையில் இந்திய சினிமா பார்த்திராத ஒரு அழுத்தமான திரைக்கதையாக இருக்கும் என்றும் இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 


மேலாளர் விளக்கம் :


எங்கும் தங்கலான் பீவர் இருந்து வரும் இந்த சமயத்தில் படத்தில் சீயான் விக்ரமுக்கு வசனங்களே இல்லை என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீயான் விக்ரம் மேலாளர் எக்ஸ் தளப்பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார். 


தங்கலான் படத்தின் தெலுங்கு டீசர் வெளியீட்டின் போது நடிகர் விக்ரம் விளையாட்டாக பத்திரிகையாளர்களிடம் "எனக்கு படத்தில் வசனமே இல்லை" என சொல்லி இருந்தார். அதே போல தமிழ் டீசர் வெளியீட்டின்போது "முதன்முறை லைவ் சவுண்ட் செய்திருக்கிறேன், டப்பிங் கிடையாது ஸ்பாட்டில் பேசுவதுதான்" எனக் கூறியிருந்தார். இதை எடுத்துரைத்து சீயான் விக்ரமுக்கு படத்தில் வசனங்கள் நிச்சயமாக உண்டு என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார் மேலாளர். 


 



பான் இந்தியன் படம் :


பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயராகியுள்ள தங்கலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியன் படமாக குடியரசு தின ரிலீசாக 2024ம் ஆண்டு ஜனவரி 26க்கு வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டது. 


தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது ஒரு எமோஷனலான த்ரில்லர் கலந்த பீரியாடிக் ஆக்ஷன் படமாக இருக்கும். இப்படம் நிச்சயம் திரை ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.    


எனவே சீயான் விக்ரமுக்கு தங்கலான் படத்தில் வசனங்களே இல்லை எனப் பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என்பதைத் தெளிவாக எடுத்துரைத்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார் சீயான் விக்ரமின் மேலாளர். இது தெரிந்த பிறகு தான் விக்ரம் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.